ஜிஞ்சர் டீ -இந்திய எரிபொருள்

நீ ஒரு டீயாகவே இருந்த போதிலும்

பலரின் இருளைப் போக்கும் தீயாகவே திகழ்கின்றாய்.

பத்தாப்பு படிக்கையில அதிகாலையில எழுந்து தூக்கமில்லாம படிக்க அம்மா வச்சுக் கொடுத்ததும் நீதான்…

எம்புட்டு வேல செஞ்சாலும் அப்பத்தா ” எனக்கு ஒரு டம்ளர் டீ போதும்யா” என கேப்பதும் நீதான்…

சாகுறதுக்கு முன்னாடி கொள்ளு சீயான் மரணப்படுக்கையில் கேட்டதும் நீதான்…

விடியும் காலைப் பொழுதுகளை ‘முடியும்’ என முறுக்குபவனும் நீதான்…

நீண்ட நெடிய இரவுகளில் உடன் பயணிக்கின்றவனும் நீதான்…

சராசரி இந்தியனுக்கு ஆக்சிஐனே நீதான்…

உன்னால்தானே தெருவோர தேநீர் கடை முக்கிய முடிவெடுக்கும் சட்டசபை ஆனது…

உன்னால்தானே அன்றாட ஒரேவித வாழ்க்கையையும் பலவிதமாக வாழ்ந்து பார்த்து பரிணமிக்க விழைகிறது…

டீ அல்ல நீ

நான் அல்லவா நீ..!

-Vignesh Sekar

நாளைய உலகம்

சிம்பன்சியில் ஜனனித்த நம் நாகரிகம் சிந்து சமவெளியை நோக்கி பயணித்து இன்று ஆர்டிபிஸியல் இண்டெலிஜென்ஸில் கோலோச்சி முன்னேறி கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் உயிர் நதி மூலம் ஒரே சொல்தான் ‘மாற்றம்’. டார்வினின் பரிணாமக் கொள்கை படி மனிதன் தன்னை சமுதாயத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக மாற்றங்களை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறான். நெருப்பு, சக்கரம், தகவல் தொழிழ் நுட்பம் என நாம் இப்போது மூன்றாவது புரட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பறவையை கண்டான் விமானம் படைத்தான். ஆப்பிளை கண்டான் புவி ஈர்ப்பு விசையினை படைத்தான். கணிப்பானை பார்த்தான், கணிப்பொறி படைத்தான். ஒரே ஒரு இன செல்லை மட்டும் வைத்து ஒரு புது உயிரையே படைத்து மனிதனும் கடவுள் ஆகி விட்டான்.

இச்சீரிய கண்டுபிடிப்புகளால் வாஷிங்டனிற்கும் வாடிப்பட்டிக்கும் நொடிபொழுதில் உரையாடல் சாத்தியமாகிறது.

நவீன மருத்துவம், ராக்கெட் தொழில்நுட்பம்,அணுஆற்றல் ,இயந்திர மனிதன் இன்னும் எத்தனையோ எத்தனை நம் படைப்புகள்.

எண்ணற்ற பயன்கள் இருந்தும் இந்த தொழில் நுட்பங்கள் வரமா? சாபமா? என்பது இன்னும் விளங்க முடியா புதிராகவே உள்ளது.

இன்று முதல் நாம் அனைவரும் தொழில் நுட்பங்களை ஆக்கபூர்வ வளர்ச்சிக்கும் உலக முன்னேற்றத்துக்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற சூளுரை உரைத்தோமானால் “நாளைய உலகம்” என்பது நிச்சயம் நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டு செல்லும் வரமே என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

பாரதி என்னும் தீராத்தழல்

பாரதி (திசம்பர் 11)

கம்பனுக்கு பிறகு நல்கவிஞனுக்காக தமிழ் கிடந்த தவத்தின் புதல்வனாய் அல்லவா பிறந்தாய் நீ்…!

உன்னால் எங்கள் வாழ்வில் உதித்த தாக்கங்கள் கஜா புயலினைக் காட்டிலும் வலுவானது.

கானகத்தினூடே ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் மாயைகள்தானோ’ என்று முற்றுந்துறந்தாய்..

பூணூல் துறந்து ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்‘என்று சமத்துவம் முழங்கினாய்…

கண்ணம்மா- என் காதலியில் ‘நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன், நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்’என்று காதலுக்கு புது பரிணாமம் கொடுத்தாய்…

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்று தமிழகத்திற்கணி செய்தாய்…

‘இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’என்று பயத்திற்கே பயங்காட்டினாய்..

‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்- அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’என்று பாடி அப்போதே பாலின வேறுபாடுகளை களைந்தாய்..

‘திக்குகள் எட்டும் சிதறி – தக்க தீம்தரிகிட தீம்தரிகிடத் தத்தோம்‘ என்று பாடி மனதில் நீங்காத ரீங்காரம் தந்தாய்…

‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’என்று வேலையற்ற மூடர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தாய்…

கவி செய்வரோல்லாம் கவிஞரல்லர்… தீரா வறுமையிலும் கவிக்காகவே வாழ்ந்தவன் நீ… கவிக்காகவே வீழ்ந்தவன் நீ..

பெண்ணிய முன்னேற்றம், சாதிய ஒழிப்பு, விடுதலை , தேசப்பற்று, சுயமரியாதை இப்படி இன்னும் எத்தனையோ துறைகளில் புரட்சி புரிந்தாய்..

உன்னைப் படிக்கும் போதெல்லாம் மனதில் படரந்துள்ள பழமைவாதம் பசையற்றுப் போவதை உணர்கிறேன்…

கோலாகலமாக கொண்டாடப் பட வேண்டியவன் நீ்… வள்ளுவன்,கம்பனுக்கு நிகராய் வணங்கப் பட வேண்டியவன் நீ்… புதுக்கவிதைகளுக்கு உயிர்நதி மூலமானவன் நீ்..

தீத்தின்ற போதும் தீராத்தழலாய் தமிழர் மனதில் என்றும் நீ் எரிந்து கொண்டிருப்பாய் உன் கவிக்களினூடே..!

உன்னையே வாசித்து வாசித்து உன்னிலே பரிணமிக்க விழைகிறோம் தமிழர் நாங்கள்…!

-விக்னேஷ் சேகர்.

பித்தனின் நடுநிசி புலம்பல்…

எந்தையுமல்லாது ஏங்குவோரிமிலாது துளிரித்ததாலோ என்னமோ பிதற்றுகிறான் இப்பித்தன் நடுநிசியினிலே…..

வேண்டா….

காதிலணிய கடுக்கன் வேண்டா…

விற்றுப் பிழைக்க காணி வேண்டா…

நேற்றுகளை எண்ணும் நினைவு வேண்டா….

கண்ணே மணியே கொஞ்ச கண்மணி வேண்டா…

விழாமல் கிடைப்பின் வெற்றி வேண்டா….

நித்தம் உழைக்காமல் கிடைப்பின் உணவே வேண்டா…

வேண்டும்….

நினைவு நல்லன வேண்டும்…

வஞ்சகமில்லா வாழ்வு வேண்டும்…

கொடுத்துதவ சக்தி வேண்டும்….

இடியே விழின் இடியா மார்பு வேண்டும்…

ஏரிதழலென அணையா கனவு வேண்டும்…

இமயம் போன்ற நிலையான கொள்கை வேண்டும்…

– விக்னேஷ் சேகர்