பாரதி என்னும் தீராத்தழல்

பாரதி (திசம்பர் 11)

கம்பனுக்கு பிறகு நல்கவிஞனுக்காக தமிழ் கிடந்த தவத்தின் புதல்வனாய் அல்லவா பிறந்தாய் நீ்…!

உன்னால் எங்கள் வாழ்வில் உதித்த தாக்கங்கள் கஜா புயலினைக் காட்டிலும் வலுவானது.

கானகத்தினூடே ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் மாயைகள்தானோ’ என்று முற்றுந்துறந்தாய்..

பூணூல் துறந்து ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்‘என்று சமத்துவம் முழங்கினாய்…

கண்ணம்மா- என் காதலியில் ‘நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன், நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்’என்று காதலுக்கு புது பரிணாமம் கொடுத்தாய்…

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்று தமிழகத்திற்கணி செய்தாய்…

‘இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’என்று பயத்திற்கே பயங்காட்டினாய்..

‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்- அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’என்று பாடி அப்போதே பாலின வேறுபாடுகளை களைந்தாய்..

‘திக்குகள் எட்டும் சிதறி – தக்க தீம்தரிகிட தீம்தரிகிடத் தத்தோம்‘ என்று பாடி மனதில் நீங்காத ரீங்காரம் தந்தாய்…

‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’என்று வேலையற்ற மூடர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தாய்…

கவி செய்வரோல்லாம் கவிஞரல்லர்… தீரா வறுமையிலும் கவிக்காகவே வாழ்ந்தவன் நீ… கவிக்காகவே வீழ்ந்தவன் நீ..

பெண்ணிய முன்னேற்றம், சாதிய ஒழிப்பு, விடுதலை , தேசப்பற்று, சுயமரியாதை இப்படி இன்னும் எத்தனையோ துறைகளில் புரட்சி புரிந்தாய்..

உன்னைப் படிக்கும் போதெல்லாம் மனதில் படரந்துள்ள பழமைவாதம் பசையற்றுப் போவதை உணர்கிறேன்…

கோலாகலமாக கொண்டாடப் பட வேண்டியவன் நீ்… வள்ளுவன்,கம்பனுக்கு நிகராய் வணங்கப் பட வேண்டியவன் நீ்… புதுக்கவிதைகளுக்கு உயிர்நதி மூலமானவன் நீ்..

தீத்தின்ற போதும் தீராத்தழலாய் தமிழர் மனதில் என்றும் நீ் எரிந்து கொண்டிருப்பாய் உன் கவிக்களினூடே..!

உன்னையே வாசித்து வாசித்து உன்னிலே பரிணமிக்க விழைகிறோம் தமிழர் நாங்கள்…!

-விக்னேஷ் சேகர்.